பெங்களூரு: கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 22ம் தேதி தொடங்கிய இந்த கணக்கெடுப்பு, அக்டோபர் 7ம் தேதி முடிப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் முடிக்க முடியாததால், அக்டோபர் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் வசித்துவரும் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவியும் பாஜ எம்.பியுமான சுதா மூர்த்தி ஆகிய இருவரும் கணக்கெடுப்பிற்கு தங்களது தகவல்களைக் கொடுக்க மறுத்துவிட்டனர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதால், தங்களது தகவல் எந்தவிதத்திலும் அரசுக்கு உதவாது என்று கூறி தகவல் வழங்க மறுத்துவிட்டனர்.
மேலும் தனிப்பட்ட காரணங்களால் கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் மேற்கொள்ளும் கணக்கெடுப்பில் தகவல்களை வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், சுதாமூர்த்தி சாதி கணக்கெடுப்பில் பங்கேற்காதது அவரது தனிப்பட்ட விருப்பம். அரசு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் ஒன்றிய அரசு நடத்தும் சாதி கணக்கெடுப்பிலும் சுதா மூர்த்தி பங்கேற்கமாட்டார் என நம்புவதாகத் தெரிவித்தார்.துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும், சாதி கணக்கெடுப்பில் யாரையும் பங்கேற்க அரசு கட்டாயப்படுத்த முடியாது என்றும், இது தன்னார்வமாகச் செய்யப்பட வேண்டியது என்றும் தெரிவித்தார்.