பாலியல் வழக்கில் கர்நாடக ஐகோர்ட் அதிரடி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்க முடியாது
பெங்களூரு: ஹாசன் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட 4 பாலியல் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் பிரஜ்வலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு பிரஜ்வல் தாக்கல் செய்த மனு, கடந்த புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பிரஜ்வல் தாக்கல் செய்த மனுவையும் கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பிரஜ்வல் தரப்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, பலவீனமான ஆதரங்களை அடிப்படையாக கொண்டு பிரஜ்வலுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.முதகல் மற்றும் வெங்கடேஷ் நாயக் அமர்வு, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் பிறப்பித்த உத்தரவில், மனுதாரருக்கு (பிரஜ்வல்) எதிராக பல்வேறு பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே மனுதாரரை வெளியே விட்டால், அது சாட்சியங்களை சிதைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாது மனுதாரர் செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்வதால், தண்டனையை நிறுத்திவைக்க மறுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

