பெங்களூரு: கர்நாடக மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள் 15 சதவீதம் ஊதியம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 6 மணி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் அரசு பேருந்துகள் இயங்காததால், அரசு, தனியார், ஐடி நிறுவன ஊழியர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
பெங்களூருவில் மெட்ரோ ரயில்களில் அதிகாலை முதல் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்கள் இயங்காததால் பஸ் நிலையம் வெறிச்சோடியது. சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவமும் நடந்தது. ஆனால் கர்நாடகாவுக்கு தமிழக பஸ்கள் வழக்கம் போல் எந்த தடையுமின்றி இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
* உயர்நீதிமன்றம் கண்டனத்தால் போராட்டம் நிறுத்திவைப்பு
கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஒருநாள் ஒத்திவைக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் கர்நாடக உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி போக்குவரத்து சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதை நேற்று விசாரணையின் போது நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர். இதையடுத்து, வழக்கின் விசாரணை வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 7ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து ஊழியர்சங்கம் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.