பெங்களூரு: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்(மூடா) முறைகேடு வழக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை தெரிவித்திருப்பதாவது: மூடா முறைகேடு வழக்கை விசாரித்ததில் தினேஷ் குமார் ஆணையராக இருந்தபோது சட்டவிரோதமாக மாற்று நிலம் ஒதுக்கியதற்கான ஆவணங்களும் ஆதாரங்களும் கிடைத்துள்ளன. சட்டங்கள், அரசாங்க உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மீறியும், பிற மோசடி வழிகளிலும் மூடா இடங்களை ஒதுக்கியதில் பெரியளவிலான மோசடி நடந்திருக்கிறது.
அந்த மோசடியில் முன்னாள் மூடா ஆணையர் தினேஷ் குமார் முக்கிய பங்காற்றியிருக்கிறார். தகுதியற்ற நிறுவனங்கள், தனிநபர்களுக்கு மாற்று இடங்களை ஒதுக்கி கொடுத்திருக்கிறார். 252 இடங்கள் சட்டவிரோதமாக ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் சந்தை மதிப்பு ரூ.400 கோடி ஆகும். மூடா நிலத்தை ஒதுக்கிக் கொடுப்பதற்கு பெற்ற லஞ்சத்தில், மீண்டும் மூடா இடங்களையே தனது உறவினர்கள் பெயரில் தினேஷ் குமார் வாங்கியிருக்கிறார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.