Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்நாடகாவை போல் தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80% பணிகளுக்கான சட்டம் இயற்ற அன்புமணி வலியுறுத்தல்

பெங்களூரு : கர்நாடகத்தில் தனியார் வேலைவாய்ப்பில் 100% கன்னடருக்கே ஒதுக்கீடு செய்யப்படுவதாக சட்டம் இயற்றப்பட்டது. தமிழகத்தில் சட்டமியற்ற திமுக அரசு தயங்குவது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்கள் அனைத்தையும் முழுக்க முழுக்க கன்னடர்களைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் என்ற சட்ட முன்வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முன்வரைவு நாளை அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இத்தகைய சட்டத்தை கொண்டுவருவாதக் கூறி வெற்றி பெற்ற திமுக அரசு, அதை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில்,‘‘கர்நாடக மாநில தொழிற்சாலைகள், ஆலைகள் மற்றும் பிற அமைப்புகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதற்கான சட்ட முன்வரைவு’’க்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டால், கர்நாடகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மேலாண்மை பணிகளில் 50 விழுக்காடும், மேலாண்மை அல்லாத பணிகளில் 75 விழுக்காடும், சி மற்றும் டி பிரிவு பணிகளில் 100 விழுக்காடும் கர்நாடக மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். இந்த சட்டம் பிற மாநிலத்தவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் கூட, கர்நாடக மக்களின் வேலை உரிமையை பாதுகாக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.

கர்நாடகத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஆந்திரம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெலுங்கானத்திலும் இத்தகைய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஆந்திரத்தில் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து கூப்பிடு தொலைவில் உள்ள ஸ்ரீசிட்டி தொழில்பேட்டையில் தமிழர்களுக்கு அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. கர்நாடகத்திலும் இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால், கர்நாடகத்திலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படும். இதனால், அங்குள்ள மென்பொருள் நிறுவனங்களில் தமிழர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வேலைவாய்ப்புகள் இனி பறிக்கப்பட்டுவிடும்.

இந்த நிலையை மாற்றி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் குறைந்தது 80% வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழர்கள் நலன்களைக் காப்பதாகக் கூறி ஆட்சிக்கு வரும் கட்சிகள். இத்தகைய சட்டத்தை இன்று வரை நிறைவேற்றவில்லை.

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதன்பின் 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற சட்டம் இயற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை; தடையும் இல்லை. எனவே, இனியும் தயங்காமல் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 விழுக்காட்டை தமிழக இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும். துணை மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்வதற்காக வரும் அக்டோபர் மாவட்டம் கூடவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தனியார் நிறுவன வேலைகளில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.