கர்நாடகா: கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒவ்வொரு வாக்காளர்கள் பெயரை நீக்குவதற்கு தலா ரூ.80 இடைத்தரகர்களுக்கு கொடுக்கப்பட்டது விசாரணையில் அம்பலமானது. பீகார், கர்நாடகா, மஹாரஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வாக்காளர்பட்டியலில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக கர்நாடகா காவல்துறை தரப்பில் சிறப்பு புலனாய்வு குழு மைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 2023ம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஆனந்த் தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் லஞ்சம் கொடுத்து நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆனந்த் சட்டமன்ற தொகுதியில் பெயர் நீக்க கோரி 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தேர்தல் அதிகாரிகள் வீடுவீடாக சென்று சரிபார்த்ததில் 24 பெயர்கள் மட்டுமே உண்மையில் நீக்கப்பட வேண்டியவை என்பது தெரியவந்தது. கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு தகவல்படி வாக்காளர் நீக்கத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பத்திற்கு சம்மந்தப்பட்ட ஆப்ரேட்டர்களுக்கு ரூ.80 லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. கலபராதி மாவட்டத்தில் முகமது அஸ்வத் மற்றும் அக்ரம் ஆகியோரால் நடத்தப்படும் ஒரு தரவு மையத்தில் போலி விண்ணப்பங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்தது.