Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் 123 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு: குடிநீர் கிணற்றை தர்மம் வழங்கியதாக தகவல்

விருதுநகர்: காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில், 123 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், குடிநீர் கிணற்றை பொதுமக்களுக்கு தர்மமாக வழங்கியதாக தகவல் தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, மல்லாங்கிணற்றிலிருந்து கல்குறிச்சிக்கு செல்லும் சாலையில், முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவிடம் உள்ளது. இதன் அருகே கருங்கற்களால் சதுரவடிவ கிணறு உள்ளது. இதன் மேல் விளிம்பில் கல்வெட்டு உள்ளது. இதில், உள்ள தகவல் குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: பழங்காலத்தில் மன்னர்கள், வணிகர்கள், ஜமீன்தார்கள், கிராம ஆட்சியாளர்கள் தானம் செய்வதைக் கல்வெட்டுகளாகவும் செப்பேடுகளாகவும் பதிவு செய்துள்ளனர்.

இதில் தண்ணீர் தானம் மிக புண்ணியமாக கருதப்பட்டுள்ளது. மல்லாங்கிணற்றில் உள்ள கிணற்றின் விளிம்பில் இரண்டு வரி பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு காணப்படுகிறது. இதில், 1902ல் மல்லாங்கிணற்றை சேர்ந்த க.நாகம நாயக்கர் குமாரர் கணக்கு குப்புசாமி நாயக்கர் என்பவர், கருங்கற்களால் ஆன குடிநீர் கிணற்றை அமைத்து, அதை ஊர் பொதுமக்களுக்கு தர்மமாக வழங்கிய தகவல் தெரிய வருகிறது. இதில் கலி, தமிழ், ஆங்கில ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், 1904ல் நாகம நாயக்கர் இவ்வூர் சென்னகேசவ பெருமாள் கோயிலில் மடப்பள்ளி ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார் என அக்கோயில் கல்வெட்டில் உள்ளது. அக்காலகட்டத்தில் இக்கிராமத்தின் ஆட்சியாளர்களாக இவர்கள் இருந்திருக்கலாம். கி.பி.13ம் நூற்றாண்டில் குலசேகரபாண்டியன் ஆட்சியில் மக்களின் பயன்பட்டுக்காக ஒரு துலாக்கிணறு விழுப்பனூரில் தோண்டப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட சமயங்களில் பொதுமக்களுக்காக கிணறு, குளங்களை தனிநபர்களும் அமைத்துக் கொடுத்துள்ளனர். நரிக்குடியில் உலகப்பன் சேர்வைக்காரர், குண்டுகுளத்தில் கருப்பணக்குடும்பன் குளங்களையும், சோலைசேரியில் பெத்தநல்லுநாயக்கர் எண் கோண வடிவ கிணற்றையும் உபயமாக வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.