Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காரம்பாக்கத்தில் இன்று 1600 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பூந்தமல்லி: தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், சென்னை மாவட்ட பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா, இன்று காலை போரூர் அருகே காரம்பாக்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வரவேற்றார். அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் முத்துசாமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 1600 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இங்கு 1600 பயனாளிகளுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா விழாவில் மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, இருக்க இடம், பட்டாவுடன் வீட்டுடன் கூடிய இடம் கிடைப்பதில் சவாலாக உள்ளது. பட்டா என்பது, உங்களின் உரிமை. உங்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் என்பது முதல்வரின் லட்சியம். இன்று, உங்களுக்கு உறுதியளிக்க நாங்கள் இங்கே இருக்கிறோம். உங்களுக்கு பட்டா கிடைத்திருப்பதால் இன்றிரவு நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்.

நமது சுற்றுப்புறங்கள் வளரும்போது, மக்களின் வாழ்க்கையும் முன்னேற வேண்டும் என்ற முனைப்பில், கடந்தாண்டு அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதன்மூலம் 1.40 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 19 லட்சம் பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அரசை தேடி மக்கள் வரவேண்டிய நிலை மாறி, மக்களை தேடி அரசு வரவேண்டும் என்ற நிலையை முதல்வர் உருவாக்கியுள்ளார். தமிழகம் 11.19 சதவீத வளர்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உங்களுக்கு துணையாக அரசு இருக்கும். அதேபோல் எங்களுக்கு துணையாக நீங்கள் இருக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், காரம்பாக்கம் கணபதி எம்எல்ஏ, திமுக நிர்வாகிகள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.