Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காரைக்குடி ரயில் நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: இன்று காலையில் பரபரப்பு

காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் இன்று காலை கார் திடீரென தீப்பற்றி எரிந்து எலும்புக் கூடான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள செஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் இன்று காலை 5.30 மணியளவில், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்வதற்காக தனது மனைவியுடன் காரில் ரயில் நிலையம் வந்தார்.சரவணன் என்பவர் காரை ஓட்டி வந்தார். ரயில் நிலையத்தின் முன்புறம் கார் நின்றவுடன் கணேசனும், அவரது மனைவியும் இறங்கி ரயிலில் ஏறச் சென்றனர். டிரைவர் சரவணன் காரில் இருந்த உடைமைகளை எடுத்துச் சென்று ரயிலில் வைத்துவிட்டு, பாக்கியுள்ள பொருட்களை எடுப்பதற்காக காரை நோக்கி வந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக காரைக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த கணேசனும், அவரது மனைவியும் ரயிலில் வைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு கார் இருக்கும் இடத்திற்கு ஓடி வந்தனர். அங்கு கார் கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன், கார் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடானது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கணேசன் தனது சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டு, மனைவியுடன் வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் ரயில் நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.