Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக சொந்த ஊர் திரும்பும் குமரி மீனவர்கள்

*கடற்கரை கிராமங்கள் களை கட்ட ெதாடங்கின

நாகர்கோவில் : கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளி மாநிலங்களுக்கு மீன் பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப தொடங்கி உள்ளதால், குமரி கடற்கரை கிராமங்கள் களை கட்ட தொடங்கி உள்ளன.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ம்தேதி (வியாழன்) உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் உள்ளவர்கள் குமரி மாவட்டம் திரும்புவார்கள்.

குறிப்பாக மீன் பிடி தொழிலுக்காக வெளி மாநிலங்களுக்கு சென்ற மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப தொடங்கி உள்ளனர். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை 2 அரசு மீன் பிடி துறைமுகங்கள், 2 தனியார் மீன் பிடி துறைமுகங்கள் உள்ளன. குமரி மாவட்டத்தில் மீன் பிடி தொழில் பிரதானமாக இருந்தாலும் இங்குள்ள மீனவர்கள் கேரளா, கர்நாடகம், குஜராத் போன்ற வெளி மாநிலங்களுக்கு சென்று மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு வெளி மாநிலங்களில் மீன் பிடி தொழிலில் உள்ளவர்கள் தங்களது இல்ல திருமண நிகழ்வு, ஆலய திருவிழாக்கள் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வருவார்கள். இதில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஒட்டு மொத்தமாக ஊர் திரும்புவது வழக்கம் ஆகும். இவ்வாறு வரும் மீனவர்கள் புத்தாண்டு முடிந்து தான் மீண்டும் தொழிலுக்கு செல்வார்கள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் மீனவர்கள் சொந்த ஊர் வர தொடங்கி உள்ளனர்.

இதனால் கடற்கரை கிராமங்கள் களை கட்ட தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்ற மீனவர்கள் திரும்ப தொடங்கி உள்ளனர். இதனால் கடற்கரை கிராமங்கள் களை கட்டி வருகின்றன.

டிசம்பரில் தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தால் கடற்கரை கிராமங்கள் உற்சாகமாக இருக்கும். வெளி மாநிலங்களில் இருந்து மீனவர்கள் ஊர் திரும்பி வருவதால், அவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால், கொண்டாட்ட ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவர்களின் வீடுகள், கிறிஸ்தவ தேவாலயங்களில் பல்வேறு வண்ணங்களில் ஸ்டார்கள் தொங்க விடப்பட்டுள்ளன.

இயேசு கிறிஸ்து பிறப்பை நட்சத்திரம் மூலமே உலகம் அறிந்தது. அதை உணர்த்தும் வகையில் வீடுகளில் ஸ்டார்கள் தொங்க விடப்படுவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. மேலும் குடில்கள் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.

வீதிகளில் கேரல் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் இந்த கேரல் பவனி நடந்து வருகிறது. இந்த கேரல் பவனியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தும் வருகிறார்கள்.

சிறப்பு ரோந்து படை

கடை வீதிகளிலும் மாலை வேளையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. வித, விதமான ஆடைகள் தேர்வு செய்ய ஜவுளி கடைகளில் மக்கள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளன. இன்றும் (சனி) நாளையும் (ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் மக்கள் கடை வீதிகளுக்கு வருவார்கள் என்பதால், போக்குவரத்து நெருக்கடி இல்லாத வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சிறப்பு ரோந்து படைகளும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன. பல்வேறு தேவாலயங்களில் வர்ணம் பூசும் பணிகளும் தொடங்கி உள்ளன. கிறிஸ்துமசையொட்டி பேக்கரிகளில் பல்வேறு வகையிலான கேக் வகைகள் தயாரிக்கப்பட உள்ளன. இதற்கான ஆர்டர்களும் வந்த வண்ணம் உள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறினர்.