கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வாகன சோதனையின்போது கேரளாவிற்கு காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி சுனாமி காலனி வழியாக வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக எஸ்.ஐ. எட்வர்ட் பிரைட்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் சுனாமி காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தினர்.
இதையடுத்து காரை சோதனை செய்தபோது அதில் மூடை, மூடைகளாக ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் காரை ஓட்டி வந்தது களியக்காவிளையை சேர்ந்த சாமி மகன் வினு (49) என்பதும், அவரிடம் தொடர்ந்து விசாரித்ததில் கன்னியாகுமரி பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி காரில் கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து வினுவை கைது செய்த போலீசார் காருடன் ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் உணவு பொருட்கள் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வாகன சோதனையின்போது ஒரு டன் ரேஷன் அரிசி பிடிபட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.