Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 100 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட தீர்த்த கிணறு

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் உள் பிரகாரத்தில் வடக்கு பக்கம் மிகவும் பழமையான புனிதமான தீர்த்த கிணறு ஒன்று உள்ளது. இந்த தீர்த்த கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் இருந்த பிறகும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிதண்ணீராக அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தினமும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீரை கோவில் மேல் சாந்தி அல்லது கீழ் சாந்தி குடத்தில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். கோயில் மூலஸ்தானத்துக்கு முன் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் இருந்து பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாகத்தான் கோயில் மேல் சாந்திகள் இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று அபிஷேகத்துக்குரிய புனித நீர் எடுத்து வருவதற்கான வழி உள்ளது.

மின்விளக்கு வசதி இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கும் இந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு நடக்கும் அபிஷேகத்துக்குரிய புனித நீரை கிணற்றில் இருந்து குடத்தில் மேல்சாந்திகள் எடுத்து வருவார்கள்.மேலும் அம்மனுக்கு பூஜைக்கு பயன்படுத்துவதற்குரிய புனித நீரும் இந்த தீர்த்தகிணற்றில் இருந்து தான் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அம்மனுக்கு தினமும் காலையில் நைவேத்தியத்தியத்திற்காக படைக்கப்படும் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், அரவணை பாயாசம், பால் பாயாசம், பொங்கல் போன்றவைகளை தயாரிப்பதற்காகவும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

அதேபோல இரவு அம்மனுக்கு நைவேத்தியத்தியத்திற்காக படைக்கப்படும் அப்பம், வடை போன்ற பதார்த்தங்கள் தயாரிப்பதற்கும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வெளியூர்களில் உள்ள கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம், திருவிழா, கொடை விழா மற்றும் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் குடங்களில் புனித நீர் எடுத்து பகவதி அம்மனின் காலடியில் வைத்து பூஜை செய்து கொண்டு செல்வது வழக்கம்.

இந்த தீர்த்த கிணறு குப்பைகூழங்கள் விழுந்து மாசுபட்டு விடக்கூடாது என்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் இரும்பும் கம்பி வலைகளால் மூடப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த தீர்த்த கிணற்றில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கம், வெள்ளி போன்றவைகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வரும் வடமாநில பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் பகவதி அம்மன் கோயிலில் உள்ள தீர்த்த கிணற்றில் அதிகளவில் காசுகளை காணிக்கையாக கொண்டு வந்து கொட்டி வணங்கி செல்கிறார்கள்.

பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம் மற்றும் காசுகள் இந்த தீர்க்கக்கிணற்றின் மேலே உள்ள கருங்கற்களால் ஆன தளத்தில் குவிந்து கிடக்கின்றன.இந்த தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக போடும் காசுகள் இந்த கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னர் இதுவரை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு எண்ணப்படவில்லை. இந்த தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகளை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த தீர்த்த கிணற்றுக்கு செல்லும் சுரங்க பாதையில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இந்த தீர்த்த கிணறு 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை திறக்கப்பட்டது.  குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிணற்றுக்குள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய காசுகளை எடுத்து எண்ணும் பணியும் தொடங்கியது.