சென்னை: காந்தா படத்துக்கு தடை கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரனும், தமிழ்நாடு அரசின் இணை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற 69 வயதான தியாகராஜன் ஆகிய இருவரும் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்கள் தனது மனுவில், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு காந்தா படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் காந்தா. இந்த படம் தனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், நவம்பர் 14ம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்றால் அவர்களது சட்டபூர்வமான வாரிசுகளிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். படத்தில் கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றியிருந்தாலும் மக்கள் நினைவுகூற முடியும். அடிப்படை ஆதாரமில்லாத அவதூறாக தயாரிக்கப்பட்ட காந்தா படத்தை வெளியிட தடை கோரி அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்த போது, நவம்பர் 18ம் தேதிக்குள் மனுக்கு பதில் அளிக்குமாறு நடிகர் துல்கர் சல்மானுக்கு, படம் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பித்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
