உள் நோக்கத்துடன் மாவட்ட நீதிபதி, காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக உத்தரவிட்ட விவகாரம் : விஜிலென்ஸ் பதிவாளர் அறிக்கை தாக்கல்!!
சென்னை : உள் நோக்கத்துடன் மாவட்ட நீதிபதி, காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது செய்ய உத்தரவிட்ட விவகாரத்தில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வன்கொடுமை தடுப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்கும்படி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் எஸ் பி, டி எஸ் சி மற்றும் வாலாஜாபாத் ஆய்வாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட நீதிபதி மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் பதிவாளர் ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்தார். மாவட்ட நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவாக, விஜிலென்ஸ் பதிவாளரின் அறிக்கையை ஐகோர்ட் நிர்வாக குழுவுக்கு அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.