*புனித நீராடிய பக்தர்கள்
சித்தூர் : பிரசித்தி பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில்.
இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.இந்நிலையில், காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவம் விநாயகர் சதுர்த்தி அன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி பிரமோற்சவத்தின் 9வது நாளான நேற்று முன்தினம் காலை விநாயகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊர்வலத்தை பலிஜ குல வம்சத்தினர் சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தனர்.
விழாவின் தொடர்ச்சியாக 10ம் நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து துவாஜா அவரோகணம் (பிரமோற்சவ கொடி இறக்கம்) நடைபெற்றது. பின்னர் கோயில் தெப்ப குளத்தில் திரிசூல ஸ்நாபத்துடன் தீர்த்தவாரி நடைபெற்றது.
அப்போது கோயில் பிரதான அர்ச்சகர்கள், பூசாரிகள், கோயில் அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் புனித நீராடி வரசித்தி விநாயகரை வழிபட்டனர்.
அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் குளிர்பானம், தண்ணீர் மற்றும் மோர் அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. பிரமோற்சவம் முன்னிட்டு காணிப்பாக்கம் நகரம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் நகரம் முழுவதும் ஆங்காங்கே சிசிகேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.