கங்கனா உடனான நட்பு மட்டுமே மிச்சம்; ஒரு படத்தில் தான்... முழுக்கு போட்டுட்டேன்...: ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் வேதனை
புதுடெல்லி: தனது ஒரே திரைப்படத்தின் படுதோல்வி குறித்தும், அதனால் அரசியலுக்கு வந்ததாகவும் ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் மனம் திறந்துள்ளார். லோக் ஜனசக்தி தலைவரும், மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வானின் மகனும், தற்போதைய ஒன்றிய அமைச்சருமான சிராக் பஸ்வான், அரசியலுக்கு வருவதற்கு முன்பு கடந்த 2011ம் ஆண்டு ‘மிலே நா மிலே ஹம்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது சக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பிரபல பாஜக நடிகை கங்கனா ரனாவத், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்தத் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
உலக அளவில் வெறும் 97 லட்சம் ரூபாயும், உள்நாட்டில் 77 லட்சம் ரூபாயும் மட்டுமே வசூலித்து, ஒரு கோடி ரூபாய் வசூலைக் கூட எட்டவில்லை. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, சிராக் பஸ்வான் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, மும்பையிலிருந்து தனது சொந்த மாநிலமான பீகாருக்குத் திரும்பி முழு நேர அரசியலில் ஈடுபட்டார். இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது நடிப்பு அனுபவம் குறித்து அவர் விரிவாகப் பகிர்ந்துள்ளார். அப்போது அவர், ‘பொதுமக்கள் என்னை ஒரு நடிகனாக நிராகரிப்பதற்கு முன்பே, நடிப்பு எனக்கு சரிவராது என்பதை உணர்ந்துவிட்டேன். என் நடிப்பு வாழ்க்கை பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
திரைப்படத்திற்கான வசனங்களை மனப்பாடம் செய்வதும், அதிக ஒப்பனை செய்வதும் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என் தந்தை எந்தவித தயாரிப்புமின்றி இயல்பாக மேடைகளில் பேசுவதைப் பார்த்து வளர்ந்த எனக்கு, இதுபோன்ற வசனங்கள் பெரும் சவாலாக இருந்தது. அந்தப் படத்தின் மூலம் கிடைத்த ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், நடிகை கங்கனா ரனாவத்துடனான நீடித்த நட்பு மட்டுமே’ என்று கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் இருவரும் வெற்றி பெற்ற பிறகு, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கங்கனாவை மீண்டும் சந்தித்தது குறித்தும் அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


