Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கந்தன்சாவடி முதல் காரப்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.250 கோடியில் நுழைவாயில்கள்: தனியார் நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை: மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் கந்தன்சாவடி முதல் காரப்பாக்கம் வரை 17 நுழைவு மற்றும் வெளியேறும் கட்டமைப்புகளை கட்டுவதற்கு ரூ.250 கோடிக்கு தனியார் நிறுவனத்துடன் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் 2ம் கட்டத்தின் வழித்தடம் 3ல் உள்ள நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் 17 நுழைவு /வெளியேறும் கட்டமைப்புகளை வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்டு ரூப் கம்பெனி நிறுவனத்திற்கு ரூ.250.47 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், கட்டுமானப் பணிகள், நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் அடங்கும். மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களின் பெரும்பாலான நுழைவு/வெளியேறும் இடங்களில், பயணிகள் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் போன்ற போக்குவரத்தை மையப்படுத்திய பிரத்யேக சொத்து மேம்பாட்டு இடங்களை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து, கூடுதல் வருவாயை ஈட்ட முடியும்.

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் பிரிட்ஜ் அண்டு ரூப் கம்பெனி நிறுவனத்தின் சார்பாக பொது மேலாளர் ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) ஜெபசெல்வின் கிளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.