Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கண்டலேறு அணையில் இருந்து ஓரிரு நாளில் 2.50 டி.எம்.சி தண்ணீர்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் ஆந்திர அரசு வழங்க வேண்டும். இதில் 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இந்நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர் கண்டலேறுவில் திறக்கப்பட்ட தண்ணீர் 152 கி.மீ. கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டிற்கு வந்தடைந்தது. இந்த தண்ணீர் கடந்த ஜூன் 30ம் தேதி வரை தமிழகத்திற்கு 1.6 டிஎம்சி கிடைத்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இதை தொடர்ந்து ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க வேண்டிய 8 டிஎம்சி தண்ணீர் கணக்கு, ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கியது.

இதில் கடந்த வாரம் வரை 2 டிஎம்சி தண்ணீர் வழங்கியுள்ளது. மீதமுள்ள தண்ணீரை அக்டோபர் மாதத்திற்குள் ஆந்திர அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த வாரம் வினாடிக்கு 1,400 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது வினாடிக்கு 1,000 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்ட்டில் நேற்று வினாடிக்கு 442 கன அடியாக வந்தது. இந்த தண்ணீர் தமிழகத்திற்கு ஓரிரு நாட்களில் 2.50 டி.எம்.சி (இரண்டரை) கிடைக்க உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.