காஞ்சிபுரத்தை தேர்ந்தெடுத்ததன் மூலம் உதயநிதி குடும்ப வாரிசு அல்ல அண்ணாவின் வாரிசு: காசிமுத்து மாணிக்கம் பேச்சு
சென்னை: காஞ்சிபுரத்தை தேர்ந்தெடுத்ததன் மூலம் உதயநிதி குடும்ப வாரிசு அல்ல, அண்ணாவின் வாரிசு, திமுகவின் வாரிசு என நிரூபித்திருக்கிறார் என வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் கூறினார். சென்னை, கலைஞர் நகர் தெற்கில் திமுக இளைஞர் அணி பாக முகவர்கள், வட்ட நிர்வாகிகள் கூட்டம் பகுதி அமைப்பாளர் தினேஷ் தலைமையில் நடந்தது. இதில் பேராசிரியர் சுபவீரபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன், எம்எல்ஏ பிரபாகர ராஜா, பகுதி செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேசியதாவது: தமிழகத்தில் தேர்தல் பணி தொடங்கப்பட்டு விட்டது. தளபதி தலைமை கழகத்தில் கழக தோழர்களை தொகுதி, தொகுதியாக பார்த்து வருகிறார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஊர் ஊராக சென்று உதயசூரியனுக்கு வாக்கு கேட்டிட தொகுதி, தொகுதியாக கழக தோழர்களை உற்சாகம் தந்திட தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த தொடங்கிவிட்டார், முதல் தொகுதி கூட்டம் காஞ்சிபுரம். அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் தான் தொடங்கினார்.
தனது சுற்றுப்பயணத்தை 234 தொகுதியிலும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து அந்த பெட்டிசனில் சிலவற்றை மேடையிலேயே படித்து விசாரணை நடத்தி, ஆறுதலும், விடிவும் காணும் தனது புதிய திட்டத்திற்கான தொடக்க தொகுதியாக அண்ணாவின் தொகுதியான காஞ்சிபுரத்தை தேர்ந்தெடுத்ததன் மூலம் உதயநிதி தான் குடும்ப வாரிசு அல்ல, அண்ணாவின் வாரிசு, திமுகவின் வாரிசு என நிரூபித்திருக்கிறார். எடப்பாடி, அதிமுக குடும்ப அரசியலை தகர்க்கும் என்கிறார். ஜெயக்குமார் மகன், ராஜன் செல்லப்பா மகன் எம்.பி.க்கு நிற்கலாம், ஓ.பி.எஸ். மகன் எம்.பி ஆனது அதிமுகவில் தானே. இவ்வாறு அவர் பேசினார்.