காஞ்சிபுரம் எஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மல் இடமாற்றம்: உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பு
சென்னை: காஞ்சிபுரம் எஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மலையை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் எஸ்.அல்லி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பாணை வருமாறு: சென்னை கமர்சியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி தீப்தி அறிவுநிதி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி வகித்துவந்த பா.உ.செம்மல் அரியலூர் மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதி பி.வேல்முருகன் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி கே.பூர்ண ஜெயா ஆனந்த் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ.சந்திரன் சேலம் மாவட்டம் மேட்டூர் கூடுதல் மாவட்ட நீதிபதியாக (விரைவு நீதிமன்றம்) மாற்றப்பட்டுள்ளார். சென்னை குடும்பநல நீதிமன்ற 3வது கூடுதல் முதன்மை நீதிபதி வி.தேன்மொழி திருப்பத்தூர் மாவட்ட நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய பா.உ.செம்மல் சமீபத்தில் வன்கொடுமை தடுப்பு வழக்கு தொடர்பாக ஒரு மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் மாவட்ட நீதிபதி மாற்றப்பட்டுள்ளார்.