சென்னை: தமிழ்நாட்டில் தற்போது 40 தொழில் பூங்காக்கள் உள்ள நிலையில் மேலும் 21 பூங்காக்களை 21,404 ஏக்கர் பரப்பளவில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி திருச்சி, திருவள்ளூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே சிப்காட் தொழில் பூங்காக்களை அமைக்கும் பணிகள் நடக்கிகிறது. இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம் அருகில் 422.33 ஏக்கர் பரப்பளவில் ரூ.530 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ளது.
இதன் மூலம் சிப்காட் தொழில் பூங்கா மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 278.26 ஏக்கர் பரப்பளவில் ரூ.68 கோடி மதிப்பில் மற்றொரு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் சிப்காட் தொழில் பூங்கா மூலம் 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த 2 புதிய தொழில்பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. அனுமதி கிடைத்ததும் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
  
  
  
   
