காஞ்சிபுரத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கான்கிரீட் தூண்கள் ஏற்றி சென்ற லாரி மீது சொகுசு பஸ் மோதல்: டிரைவர் பலி: 23 பயணிகள் படுகாயம்
ஆற்காடு: ஆற்காடு அருகே இன்று அதிகாலை கான்கிரீட் தூண்கள் ஏற்றி வந்த லாரி மீது சொகுசு பஸ் மோதியது. இதில் டிரைவர் இறந்தார். மற்றொரு டிரைவர் உள்பட 23 பேர் படுகாயம் அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு கான்கிரீட் தூண்களை ஏற்றிக்கொண்டு லாரி நள்ளிரவு புறப்பட்டது. இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடக்கும் இடம் அருகே வந்தது. அப்போது சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி 25 பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் சொகுசு பஸ், கான்கிரீட் தூண் லாரியின் பின்புறம் மோதியது.
இதில் சொகுசு பஸ்சின் முன்புறம் நொறுங்கியது. இடிபாட்டில் சிக்கிய சொகுசு பஸ்சின் மாற்று டிரைவரான கிருஷ்ணகிரி அடுத்த நாகமங்கலத்தை சேர்ந்த ஹரீஷ்குமார்(27) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பஸ்சை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த ஷெரீப்(28) உள்பட 23 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர். விபத்தை கண்டு அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனை, மேல்விஷாரம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பலியான டிரைவர் ஹரீஷ்குமாரின் சடலத்தை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை நடத்தியதில், விபத்து நடந்த இடத்தில் கான்கிரீட் தூண் ஏற்றி வந்த லாரி சர்வீஸ் சாலையில் திரும்பியது. அப்போது பின்னால் வந்த சொகுசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறத்தில் மோதியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பஸ்சை, கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர்.