Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 3500 ஆண்டுகள் பழமையான மாமரம் காய்க்க தொடங்கியது

Kanchipuram, Mango Treeகாஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள தல விருட்சமான 4 வகையான சுவைகளை தரும் 3,500 ஆண்டுகள் பழமையான மாமரம் இந்த சீசனில் காய்க்க தொடங்கி உள்ளது.

பஞ்சபூத தலங்களில் மண் தலமாக போற்றப்படுவது உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில். இந்த, கோயிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார்.

இக்கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்து ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலி அம்பாளையும் வழிபட்டு செல்கின்றனர். இக்கோயிலின் தலவிருட்சமாக மாமரம் உள்ளது. சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மாமரம் கோயில் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் உள்ளது.

இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமாஸ்கந்தர் வடிவில் காட்சி அளிக்கிறார். அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இந்த மரத்தின் கீழ் தான் காட்சி தந்து மணம் முடித்தார் என சொல்லப்படுகிறது. இதனாலேயே இன்றும் இங்கு திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இங்கு திருமணம் நடைபெற்றால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்த, ஒற்றை மாமரத்தின் நான்கு கிளைகள் ரிக், யஜுர், சாம, அதர்வண என நான்கு வேதங்களைக் குறிக்கும் தெய்வீக மாமரம் என நம்பப்படுகிறது. இதில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளை தருகிறது. குழந்தை பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை உட்கொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மாமரம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுப்போனது. உடனடியாக வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளுடன் இணைந்து மரத்தின் திசுக்கள் எடுக்கப்பட்டு புதிய மரக்கன்று உருவாக்கப்பட்டு, தற்போது செழித்து வளர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு சீசன் தொடங்கி உள்ளதால் தற்போது பூ பூத்து, மாமரம் காய்க்க தொடங்கி உள்ளது. தெய்வீக மாமரத்தில் மாங்காய்கள் காய்த்து உள்ளதைப் பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சியுடன் மாமரத்தை வணங்கி செல்கின்றனர்.