காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கருவேப்பம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவரது மனைவி சசிகலா (38). கட்டுமான தொழில் செய்துவருகிறார். இவர்களுக்கு திவானி (5) என்ற பெண் குழந்தை, லாதூகான் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளனர். ஆனந்தபாபு, கருவேப்பம்பூண்டி பால்வாடித்தெரு பிள்ளையார் கோயில் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் 3 தலைமுறையாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருவேப்பம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவியின் கணவர், சசிகலா-ஆனந்தபாபு தம்பதி வசிக்கும் இடம் தன்னுடைய இடம் என்றும், இதற்கான பட்டா தன்னிடம் உள்ளது என கூறி அவர்களை வீட்டை காலி செய்ய வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா-ஆனந்தபாபு தம்பதி, கலெக்டர், வருவாய்த்துறை, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனு அளித்துள்ளனர். ஆனால், எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் நேற்று மக்கள் நல்லுறவு மையத்துக்கு தனது 2 குழந்தைகளுடன் சசிகலா சென்றுள்ளார். பின்னர், நல்லுறவு மைய அரங்கத்தின் பின்பக்க கதவு அருகில் திடீரென தனது உடலிலும் குழந்தைகள் மீதும் தயாராக கொண்டு வந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், 3 பேரையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடும் சோதனையை மீறி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது.