காஞ்சியில் கோயில்களின் நகைகள் முதலீட்டு திட்டத்தில் ஒப்படைப்பு ஏகாம்பரநாதர் கோயிலுக்கு டிச.8ம் தேதி கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு கோயில்களுக்குச் சொந்தமான மற்றும் பயன்பாட்டில் இல்லாத 53 கிலோ 386 கிராம் எடையுள்ள பலமாற்றுத் தங்க நகைகள் பிரித்தெடுக்கப்பட்டன. இந்த நகைகளை மும்பையிலுள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யும் நோக்கில், காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் நவராத்திரி மண்டபத்தில் வைத்து பாரத ஸ்டேட் வங்கியிடம் முறையாக ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில், குன்றத்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில், திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 53 கிலோ 386 கிராம் பலமாற்றுப் பொன் இனங்களை, மும்பை ஒன்றிய அரசு தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி இடம் ஒப்படைத்தனர்.
பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் 8ம் தேதி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களுக்கான மதிப்பை அவர்களே குறைத்துக் கொள்வதாக உள்ளது என்று கூறினார்.