ஊட்டி : ஊட்டி அருகே காமராஜர் சாகர் அணை பகுதியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவது மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களையும் பார்வையிட ஆர்வம் காட்டுகின்றனர்.
நீலகிரி சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டம் மட்டுமின்றி அதிக வனப்பகுதிகள் உள்ள மாவட்டமாகவும் விளங்கி வருகிறது. மேலும் நீர்மின் உற்பத்திக்காக பல்வேறு அணைகளும் உள்ளன. மின்வாரிய அணைகள், அடர்ந்த காப்பு காடுகளுக்குள் செல்ல யாரையும் அனுமதிப்பதில்லை.
குறிப்பாக பாதுகாப்பு கருதி தடைசெய்யப்பட்ட மின்வாரிய அணை பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டி தவிர்த்து புற நகர் பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் அணை பகுதிகளில் அத்துமீறி நுழைகின்றனர்.
கூடலூர் சாலையில் உள்ள எர்த்தன் டேம், காமராஜர் சாகர் அணை பகுதிகளில் அத்துமீறி நுழைகின்றனர். மேலும் அணையில் இறங்கி விளையாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். வனப்பகுதி மற்றும் அணைப்பகுதிக்குள் நுழையும் சுற்றுலா பயணிகள் அங்கு உணவு மற்றும் மது போன்றவற்றை அருந்தி விட்டு மீதமான உணவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், காலி மதுபாட்டில்களை வீசி விடுகின்றனர்.
இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் நீடிக்கிறது. சில சுற்றுலா பயணிகள் காப்பு காடுகளுக்குள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நுழைகின்றனர். இதனால் அவர்களை யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் தாக்க கூடிய அபாயமும் நீடிக்கிறது.
ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் அணைகளில் உள்ள நீர் மிகவும் குளுமையாக இருக்கும் நிலையில், அதன் ஆபத்தை உணராமல் சிலர் குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.