கமலஹாசன் நடித்து வெளியான நாயகன் திரைப்படத்தை மறு வெளியீடு செய்ய தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நாயகன் திரைப்படம் ரீ ரிலிசுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படம், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரந்துள்ள வழக்கில், நடிகர் கமலஹாசன் மற்றும் சரண்யா உள்ளிட்டோர் நடித்த நாயகன் திரைப்படத்தை தனது நிறுவனம், ஏடிஎம் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தினை வெளியிடும் உரிமையை கடந்த 2023ல் பெற்றுள்ளது. இதை மறைத்து வி.எஸ்.பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நாயகன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இது முறைகேடான நடவடிக்கையாகும். எனவே நாயகன் திரைப்படத்தை மறு வெளியீடு செய்ததற்கு தடை விதிக்க வேண்டும். மறு வெளியீடு மூலம் வசூலான தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வி.எஸ்.இன்டர் நேஷனல் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, படத்தை மறு வெளியீடு செய்ய அதிகாரபூர்வமான ஒப்பந்தம் எங்களிடம் உள்ளது. காப்புரிமை சட்டம் எதுவும் மீறப்படவில்லை என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, படத்தை வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் இந்த மனுவுக்கு தயாரிப்பாளர் மற்றும் வி.எஸ்.பிலிம் இன்டர் நேஷனல் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

