சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மீண்டும் இணைந்து படம் நடிக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இது வெறும் செய்தியாக தான் இருந்ததே தவிர அதிகாரபூர்வமாக இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். 46 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பான, தரமான சம்பவம் நடக்குமா என்ற நடிகர் சதீஷின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “நாங்கள் படம் கொடுக்கிறோம், அதை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என மக்கள்தான் சொல்ல வேண்டும்.
அதற்கு முன்பே தரமான சம்பவம் என சொன்னால் எப்படி. உங்களுக்கு படம் பிடித்தால் மகிழ்ச்சி, பிடிக்கவில்லை என்றால் மீண்டும் முயற்சி செய்வோம். நானும் ரஜினியும் இணைந்து ரொம்ப நாள் ஆச்சு. எங்களுக்குள் இருக்கும் போட்டி நீங்கள் ஏற்படுத்தியது, நாங்கள் முன்னுதாரணமாக இருக்க விருப்பினோம், அதனால் தனித்தனியே பிரிந்து நடித்து வந்தோம்” என்றார். இதன் மூலம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் உறுதியாகியுள்ளது.