திரு. வி.கலியாணசுந்தரனார் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்தல்
சென்னை: தமிழ் உரைநடையைப் பாமரரும் படிக்கும் வண்ணம் எளிமைப்படுத்தி, எழிலூட்டி வழங்கியவரும் சொற்களின் பொருளில் புதுமை கண்டவரும் தமிழ்த்தென்றல் என்று அனைவராலும் போற்றப்படுபவருமான திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 142ஆம் பிறந்தநாள் 26.8.2025 செவ்வாய்க்கிழமையன்று அமைகிறது. திரு.வி.க (திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்) அவர்கள் தற்போதுள்ள சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், துண்டலம் கிராமத்தில் 26.08.1883 அன்று பிறந்தார். சென்னையில் இராயப்பேட்டையில் உள்ள வெசுலிப் பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா.கதிரைவேற்பிள்ளையிடமும் மயிலை தணிகாசல முதலியாரிடமும் தமிழ்க்கல்வி கற்றவர்.
திரு.வி.க. அவர்கள் தேசபக்தன், திராவிடன், நவசக்தி போன்ற நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியதன் மூலம் சிறந்த இதழாசிரியராகவும் தமிழ்நாட்டில் உரிமைக்கும் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டதன் மூலம் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவராவார்.
தூய தமிழை உயர்த்தி பிடித்த திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள் சிறந்த. மேடைப் பேச்சாளர். 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்', 'பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை', 'உள்ளொளி', 'உரை நூல்கள்', 'பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும்', 'முருகன் அல்லது அழகு', 'இலங்கைச் செலவு' (பயணநூல்) போன்ற 55-க்கு மேற்பட்ட நூல்களையும் எழுதிய சிறந்த எழுத்தாளராகவும் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளார்.
தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் புகழினை உயர்த்தும் வகையில் சென்னையிலுள்ள செனாய் நகரில் அவர் பெயரிலேயே 1955ஆம் ஆண்டில் பள்ளி தொடங்கப்பட்டு அப்பள்ளியிலேயே அவரின் மார்பளவுச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. மேலும் செனாய் நகரிலுள்ள பூங்காவிற்கு திரு.வி.க பூங்கா' என்று பெயரிடப்பட்டு அப்பூங்காவிலும் மார்பளவு சிலை ஒன்று அமைக்கப்பெறுள்ளது.
சென்னையில் ஒரு பகுதிக்கு 'திரு.வி.க நகர்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி பூங்காவில் 27.04.1968 அன்று சென்னைத் தொழிலாளர் சங்க பொன்விழா நிகழ்வின் பொழுது இந்திய தொழிற் சங்க இயக்கத் தந்தை திரு.வி.க அவர்களின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற கொள்கைக்கு ஏற்ப, பெருந்தொண்டுகள் ஆற்றிய 'தமிழ்த்தென்றல்' திரு.வி. கலியாணசுந்தரனார் அவர்களின் புகழைப் போற்றும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மதுரவாயல் வட்டத்தில் அவர் பிறந்த ஊரான துண்டலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அவருடைய பிறந்தநாளான 26.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையால் மாலை அணிவித்து, அவர்தம் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது.