*ஊட்டியில் கிலோ ரூ.300க்கு விற்பனை
ஊட்டி : கல்லாறு தோட்டக்கலைத்துறை பண்ணையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மங்குஸ்தான் பழங்கள் கிலோ ஒன்று ரூ.300க்கு சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள் மற்றும் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இவைகள் உற்பத்தி செய்த பின் பொதுமக்களுக்கும் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பண்ணைகளில் தற்போது இயற்கை முறையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பழப்பண்ணைகளில் பல்வேறு பழ மரங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இங்கு மங்குஸ்தான், ரம்புட்டான், துரியன் உட்பட பல்வேறு பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், பல்வேறு வகையான பழ நாற்றுக்குள், வாசனை திரவிய பொருட்களின் நாற்றுகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
அதேபோல் வாசனை திரவிய பொருட்களும் அதிகளவு இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து பழங்கள் மற்றும் வாசனை திரவிய பொருட்கள் இயற்கை முறையிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு இயற்கை முறையில் அதிக அளவு மங்குஸ்தான் பழங்கள் உட்பட பல்வேறு பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இவைகள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த பழங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வாங்கி சாப்பிடுகின்றனர்.
மங்குஸ்தான் பழத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. வைட்டமின் பி1, பி2, பி9, வைட்டமின் சி, மெக்னீசியம், காப்பர் மற்றும் நார்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த படங்களை பெரும்பாலான மக்கள் விரும்பி உண்கின்றனர். இந்நிலையில், கல்லாறு பண்ணையில் இம்முறை அதிகளவு இந்த பழங்கள் காய்த்துள்ளன.
இதனை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்களில் வைத்து சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். சாதாரணமாக, வெளி மார்க்கெட்டில் தற்போது கிலோ ஒன்று ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் கடை அமைக்கப்பட்டு கிலோ ஒன்று ரூ.300க்கு மங்குஸ்தான் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பழங்களை வாங்கி செல்கின்றனர். மேலும், உள்ளூர் மக்கள் பலரும் இந்த பழங்களை வாங்கி செல்கின்றனர்.