கள்ளக்குறிச்சி அருகே மாடியில் உல்லாசமாக இருந்தபோது மனைவி, கள்ளக்காதலன் கொடூரமாக வெட்டிக்கொலை: 2 தலையுடன் வேலூர் சிறையில் சரணடைந்த கணவன்
தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி அருகே தகாத உறவில் ஈடுபட்ட மனைவியையும், கள்ளக் காதலனையும் கொடூரமாக வெட்டிக் கொன்று, துண்டிக்கப்பட்ட 2 தலைகளுடன் வேலூர் சிறையில் கணவன் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டாம்பாட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி (60), விவசாயி. இவருக்கும் தியாகதுருகம் அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (40) என்பவருக்கும் 20 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பரமேஸ்வரி (19), பவானி (18), பவித்ரா (15) என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பரமேஸ்வரிக்கு திருமணமாகிவிட்டது. பவானி, பவித்ரா படித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபகாலமாக லட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு (55) என்ற விவசாயிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறியதாக தெரிகிறது. இந்த விவகாரம் கணவர் கொளஞ்சிக்கு தெரியவரவே, லட்சுமியை பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் இதனை சிறிதும் கண்டுகொள்ளாத லட்சுமி, தங்கராசை அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமி மீது கொளஞ்சி கடும் கோபத்தில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கொளஞ்சி வெளியூருக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெளியூர் செல்லாமல் நள்ளிரவில் திடீரென வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது ஜன்னல் வழியாக பார்த்தபோது லட்சுமி அறையில் இல்லாததால், சந்தேகமடைந்த கொளஞ்சி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அங்கு லட்சுமியும், தங்கராசுவும் மிக நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி மறைத்து வைத்திருந்த கொடுவாளால் முதலில் தங்கராசுவின் தலையை வெட்டி சாய்த்துள்ளார். அப்போது அதனை தடுக்க வந்த மனைவி லட்சுமியையும் தாக்கி, அவரது தலையையும் கொளஞ்சி கொடூரமாக வெட்டியுள்ளார். பின்னர் இருவர் தலையையும் வெட்டி எடுத்துக் கொண்டு கொளஞ்சி தலைமறைவானார்.
இந்நிலையில் நேற்று விடியற்காலை அப்பகுதியில் பால்கறக்க வந்த நபர், கொளஞ்சி வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரத்தம் சொட்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது தலை இல்லாமல் 2 உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வரஞ்சரம் போலீசார் தலையில்லாமல் கிடந்த 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கொலை செய்யப்பட்டு கிடந்தது லட்சுமி, அவரது கள்ளக்காதலன் தங்கராசு என்பதும், அவர்களை லட்சுமியின் கணவர் கொளஞ்சி கொடூரமாக தலையை வெட்டி கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே 2 தலைகளையும் கட்டைப் பையில் வைத்துக் கொண்டு பேருந்தில் வேலூர் மத்திய சிறைக்கு சென்ற கொளஞ்சி அங்கு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
பின்னர் அவரை அங்கிருந்து பாகாயம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசாரிடம் 2 தலையையும் ஒப்படைத்து கொளஞ்சி சரண் அடைந்தார். இதையடுத்து 2 தலைகளும் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொளஞ்சி மட்டும் இந்த கொலையை செய்தாரா அல்லது வேறு யாரும் அவருக்கு உதவியாக இருந்தார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவில் ஈடுபட்ட மனைவி, கள்ளக்காதலனை கணவனே கொடூரமாக தலையை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* 2வது திருமணம்
கொளஞ்சிக்கு ஏற்கனவே கலியம்மாள் என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2 குழந்தைகள் இருந்தன. முதல் மனைவி கலியம்மாளும் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கொளஞ்சி கண்டித்ததால் கலியம்மாள் 2 குழந்தையுடன் கிணற்றில் குதித்துள்ளார். இதில் 2 குழந்தைகளும் உயிரிழந்தன. கலியம்மாள் மட்டும் உயிர் பிழைத்தார். பின்னர் அவரும் இறந்து விட்டார். அதனை தொடர்ந்து 2வதாக லட்சுமியை கொளஞ்சி திருமணம் செய்துள்ளார். லட்சுமியும், முதல் மனைவியை போலவே தகாத உறவில் இருந்ததால் ஆத்திரமடைந்த கொளஞ்சி அவரை கொடூரமாக வெட்டி சாய்த்ததாக கூறப்படுகிறது.