Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண விவகாரம் சிபிஐ விசாரிக்க கோரிய மனுக்கள் விசாரணை ஜூலை 30க்கு தள்ளிவைப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர்கள் அணி மாநிலச் செயலாளர் இன்பதுரை மற்றும் பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தன. பட்டியலில் 25வது வழக்காக பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசின் அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கவேண்டும். அதனால், வழக்கின் விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரினார்.

அதற்கு கே.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, வழக்கில் உடனடியாக புலன் விசாரணையை நடத்த வேண்டும். புலன் விசாரணையை உரிய நேரத்தில் தொடங்காவிட்டால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும். விசாரணை வீணாகி விடும் என்றார். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்றார். அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, ஒவ்வொரு ஆண்டும் விஷ சாராய மரண சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதுசம்பந்தமான வழக்குகளில் தாமதமான விசாரணை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுகின்றனர். அதனால் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்றார். இதையடுத்து, அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஜூலை 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.