Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை அக்.7ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை அக்.7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17) என்பவர் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது.

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிபிரியா, கீர்த்திகா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் இவ்வழக்கில் இருந்து ஆசிரியர்கள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய இருவரும் நீக்கப்பட்டிருந்தனர்.

மேலும் இவ்வழக்கில் அப்போதைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், விசாரணை மேற்கொண்ட போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட 36 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சாட்சிகள் யாரும் வராத நிலையில் இவ்வழக்கின் விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார்.