மார்த்தாண்டம்: களியக்காவிளை அருகே பாரில் ஏற்பட்ட மோதலில் பாஜக பிரமுகர் அடித்துகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் தனிவிளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (48). பாஜ பிரமுகர். நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்த வின்சென்ட் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் பொன்னம்மாள் உடனடியாக தனது மற்றொரு மகன் ரவிக்குமாருக்கு (54) தகவல் தெரிவித்தார்.
ரவிக்குமார் மற்றும் குடும்பத்தினர் மயங்கி கிடந்த வின்சென்டை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வின்சென்ட் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். உடலில் காயங்கள் இருந்தது. இதுகுறித்து ரவிக்குமார் கொடுத்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கொலையான வின்சென்ட் சம்பவத்தன்று களியக்காவிளை அருகே ஒற்றாமரம் என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்று உள்ளார். அங்கு ஏற்கனவே காங்கிரஸ் நிர்வாகி உள்பட 5 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். பாரில் வின்சென்ட் மற்றும் 5 பேர் அரசியல் ரீதியாக பேசும்போது தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது, ஆத்திரம் அடைந்த 5 பேர் சேர்ந்து வின்சென்ட்டை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். தாக்குதலில் நிலைகுலைந்து போன வின்சென்ட் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்துள்ளார். எனினும் வின்சென்ட் மீது இருந்த ஆத்திரம் தீராத காங்கிரஸ் பிரமுகர் உள்பட 5 பேர் மெதுகும்மலில் உள்ள வின்சென்ட் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மீண்டும் பயங்கரமாக தாக்கியுள்ளனர்.
இதனால் சுயநினைவை இழந்து வின்சென்ட் மயங்கியதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று உள்ளது. அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினர் வின்சென்ட் குடிபோதையில் மயங்கியதாக கருதி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு வின்சென்ட் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையறிந்த பாஜகவினர் நேற்று முன்தினம் இரவு களியக்காவிளை காவல் நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

