ஈரோடு : ஈரோடு காலிங்கராயன் பாசனத்தில், முதல் போக சாகுபடிக்கான நாற்றங்கால் விடுதல் மற்றும் உழவுப்பணி தொடங்கியுள்ளது. ஈரோடு காலிங்கராயன் வாய்கால் பாசனத்தில் கொடுமுடி வரை,18 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.பாசனப்பகுதிகளான ஆர்.என்.புதூர்,பி.பெ. அக்ரஹாரம், வைராபாளையம், சாவடிப்பாளையம்,கொடுமுடி பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கான நாற்றங்கால் விடுதல் மற்றும் உழவுப்பணி தொடங்கி நடந்து வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில் ஆண்டு தோறும் 18 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது.
வாய்க்காலை ஒட்டியுள்ள கிணற்றுப் பாசனம் மூலம் 3,000 ஏக்கர் பயன்பெறுகிறது.அதிகளவு நெல்,கரும்பு,வாழை,மஞ்சள் பயிரிடப்படுகிறது. மாமரத்துபாளையம், பி.பி.அக்ரஹாரம்,வைராபாளையம்,கருங்கல்பாளையம் பகுதிகளில் 5,000 ஏக்கர் வரை நெல் சாகுபடி அதிகளவு நடக்கிறது.
தற்போது,வயலில் தண்ணீர் தேக்கி 15 நாட்களான நிலையில் உழவுப் பணிகளை துவக்கியுள்ளோம். வைராபாளையம்,கருங்கல்பாளையம்,அக்ரஹாரம் பகுதிகளில் வாய்க்கால் வலது கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்கனவே உழவுப் பணியை முடித்துள்ளோம்.வயலை நடவுக்காக சீரமைக்க மாடுகள் மூலம் மட்டையடிக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பத்து நாட்களில் நாற்றங்காலில் நாற்றுகள் தயாரானதும்,நெல் நடவுப் பணிகளை துவங்க உள்ளோம்.இவை தவிர, பாசூர் பகுதிகளில் நான்காயிரம் ஏக்கருக்கு கரும்பும்,மூலக்கரை,வெண்டிபாளையம் பகுதிகளில் வாழையும் போடப்பட்டுள்ளது. மற்ற சில பகுதிகளில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.