ஈரோடு : ஈரோடு, காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில், வைராபாளையத்தில் நேற்று முன்தினம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் திறந்துவிடப்படுகிறது. இப்பாசனப் பகுதியில் சுமார் 15,745 ஏக்கரில் பெருமளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தவிர, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
தற்போது, இப்பாசன பகுதியில் சுமார் 9,000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்துள்ள நிலையில் கடந்த 15 நாள்களாக அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக விவசாயிகளிடமிருந்து, நேரடியாக நெல்லை கொள்முதல் செய்திட நேற்று முன்தினம் ஈரோடு, வைராபாளையத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு, சன்ன ரகம் கிலோ ரூ.25.45க்கு அதாவது குவிண்டால் ரூ.2,545க்கும், பொதுமோட்டா ரகம் கிலோ ரூ,25 - குவிண்டால் ரூ.2,500க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறுகையில, ‘‘இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 1,000 மூட்டை என்ற கணக்கில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளில் அதிகமாக அறுவடை நடந்தபோது, கணபதிபாளையம் பகுதியில், கூடுதலாக ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது அறுவடை தொடங்கி உள்ள நிலையில், தேவையின் அடிப்படையில் டிசம்பர் இறுதியில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.


