2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது; உலகம் முழுவதும் சென்று கலையை வளர்க்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: நம்முடைய கலைஞர்கள் உலகம் முழுவதும் சென்று கலைகளை வளர்க்க வேண்டும், அரசும் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்று 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப்பதக்கமும், விருது பட்டயமும் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு நாட்டில் தங்கத்தின் விலை என்னவென்று உங்களுக்கே தெரியும். ராக்கெட் வேகத்தில், ஒருநாளைக்கு இரண்டு முறை விலை ஏறிக்கொண்டு இருக்கிறது. இந்த விருது அறிவித்த அன்றைக்கு இருந்த தங்கத்தின் விலையும், இன்றைக்கு இருக்கக்கூடிய விலையையும் ஒப்பிட்டு பார்த்தாலே புரியும். ஆனால், அவ்வளவு மதிப்புமிக்க தங்கத்தைவிட, ‘கலைமாமணி’ என்று புகழ் சேர்க்கும் பட்டத்திற்குத்தான் மதிப்பு அதிகம். ஏனென்றால், இது தமிழ்நாடு தருகின்ற பட்டம்.
நம்முடைய திராவிட மாடல் அரசு முத்தமிழ் கலைஞர்களை போற்றி வருகிறது. நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் என்று நிதி உதவியை உயர்த்தி வழங்கியிருக்கிறோம், தமிழ்நாடு இயல் - இசை - நாடக மன்றத்துக்கு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியை, 3 கோடி ரூபாயில் இருந்து 4 கோடியாக உயர்த்தி வழங்கியிருக்கிறோம். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களால் கலைஞர்களை போற்றி வருகிறோம். இசைஞானி இளையராஜாவுக்கு அரசு மாபெரும் பாராட்டு விழா எடுத்தது.
உலகில் எந்த கலைஞருக்கும், எந்த அரசாங்கமும் இப்படி ஒரு பாராட்டு விழாவை நடத்தியதில்லை என்று இசைஞானியை குறிப்பிட்டார். நம்முடைய கலைஞர்கள், இங்கே மட்டுமல்ல, உலகம் முழுவதும் சென்று கலைகளை வளர்க்க வேண்டும். தமிழ் கலைகளை பரப்பவேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும், உதவிகளையும் இயல் - இசை - நாடக மன்றம் செய்ய வேண்டும்; அரசும் அதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, எம்பி, எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
90 கலைஞர்களுக்கு விருது;
2021ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது எழுத்தாளர் திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா (எ) தே.ச.ராமசுப்பிரமணியன் இயற்றமிழ்க் கவிஞர், நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி எஸ். முருகன், திரைப்பட நடிகர் எஸ்.ஜே.சூர்யா, திரைப்பட நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், 2022ம் ஆண்டு திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு, திரைப்பட நடிகை ஜெயா வி.சி.குகநாதன், திரைப்பட பாடலாசிரியர் விவேகா, சின்னத்திரை நடிகை மெட்டிஒலி காயத்ரி, 2023ம் ஆண்டு திரைப்பட நடிகர் மணிகண்டன், குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான், திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், திரைப்பட பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன், திரைப்பட நடன இயக்குநர் சாண்டி (எ) சந்தோஷ்குமார் உட்பட 90 பேருக்கு நேற்று கலைமாமணி விருது வழங்கப்பட்டது.