கலைப் பண்பாட்டு இயக்ககத்தின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 90 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கலைப் பண்பாட்டு இயக்ககத்தின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 90 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2021,2022 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, உள்ளிட்ட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டது.
கலைஞர்களுக்கு விருது வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையறையுள்ளார். உங்களது கலையை, கலைத் தொண்டை இத்தனை ஆண்டுகாலம் வெளிப்படுத்தி உள்ளீர்கள். கலைஞர்களின் உழைப்புக்கு அங்கீகாரம்தான் கலைமாமணி விருது. மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளன
கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நாளுக்கும் இன்றைக்கும் தங்கம் விலையை பார்த்தால் எவ்வளவு விலை உயர்ந்திருக்கிறது என்பது . தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் தினமும் இரண்டு முறை விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. தங்கம் விலை உயர்ந்தாலும் கலைமாமணி விருதுடன் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. தங்கத்தின் விலையை தாண்டி தமிழ்நாடு அரசு கலைமாமணி வழங்குகிறது என்பதே விருதின் பெருமை
ஆண்டுதோறும் 500 கலைஞர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்ப் பாசம், தமிழர் பாசம் என்பதற்காகவே இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுத்தோம். கலைஞரின் அரசு கலைஞர்களை போற்றும் அரசாகவும் முத்தமிழை போற்றும் அரசாகவே திகழும்.
கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு ரூ.50,000ஆக இருந்த உதவித் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நலிந்த கலைஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3000ஆக உயர்த்தி வழங்கியுள்ளோம்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில், சிறப்பு விருதான பாலசரசுவதி விருதினை (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்ததோடு, விருதாளருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கத்தையும் முதலமைச்சர் வழங்கினார்
கலைமாமணி விருதுகள் வழங்கும் நிகழ்வில், திரைப்பட நடிகை செல்வி சாய் பல்லவி அவர்களுக்கு கலைமாமணி விருது மற்றும் விருதிற்கான 3 சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயத்தையும் முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில், சிறப்பு விருதான எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதினை (இசை) பத்மவிபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் சார்பில் அவரது மகன் திரு. விஜய் யேசுதாஸ் அவர்களிடம் வழங்கி சிறப்பித்ததோடு, விருதிற்கான ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கத்தையும் முதலமைச்சர் வழங்கினார்.