கலைமகள் சபாவின் சொத்துகள் விவரம் என்ன? வருவாய்த்துறை செயலர் நேரில் தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கலைமகள் சபா என்ற நிதி நிறுவனம் சுமார் 5 லட்சம் பேரிடம் முதலீடுகளை பெற்று தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்தது. இந்த நிறுவனத்தின் மீது முறைகேடுகள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், முதலீட்டாளர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வி.ஆர்.கமலநாதன், ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி வாதிடும்போது, இதுநாள் வரை இந்த சபா பெயரில் உள்ள சொத்துகளையே அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவித்தனர்.
கலைமகள் சபாவுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் சொத்துகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை 33 மாவட்டங்களில் கலைமகள் சபாவுக்கு சொத்துகள் உள்ளன என கலைமகள் சபாவுக்கு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பதிவுத்துறை ஐ.ஜி. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார். இதை கேட்ட நீதிபதிகள், கலைமகள் சபாவில் முதலீடு செய்த சுமார் 6 லட்சம் பேர் பல ஆண்டுகளாக பணத்துக்காக காத்திருக்கின்றனர். சுமார் 3 ஆயிரத்து 88 சொத்துகள் சபாவுக்கு உள்ளன. இதுவரை சொத்துகள் அடையாளம் காணப்படவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள சொத்துகளின் அடையாளம் காணும் பொறுப்பை 33 மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்கிறோம். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 33 மாவட்ட கலெக்டர்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். கலைமகள் சபா சொத்து விவரங்களை கலெக்டர்களிடம் பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி., ஒப்படைக்க வேண்டும். ஆவணங்களை பெற்று சொத்துகளை நேரில் ஆய்வு செய்து, அளவீடு செய்து அறிக்கை தர தாசில்தார் ஒருவரை சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் நியமிமிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 33 கலெக்டர்கள் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் இதுவரை கலைமகள் சபா சொத்துகள் இனம் காணப்படவில்லை. மேலும் 2 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்றார். வழக்கு மீண்டும் கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தபோதும் கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் கலெக்டர்களின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை. வழக்கின் தீவிரம் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை.
எனவே, 33 கலெக்டர்கள் அறிக்கை தருவது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக தமிழக வருவாய்துறை செயலாளர் அமுதாவை வழக்கில் நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்க்கிறது. அவர் ஆகஸ்ட் 8ம் தேதி நேரில் ஆஜராகி 33 கலெக்டர்களின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். கலைமகள் சபாவை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தனி அதிகாரியான பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தன்னிச்சையாக முடிவெடுத்து கடந்த மே 16ம் தேதி ஒரு பத்திரிகை குறிப்பை வெளியிட்டு, அதன் அடிப்படையில் 49 முதலீட்டாளர்களுக்கு குறைந்த தொகையை கொடுத்துள்ளார்.
அவரது நடவடிக்கை நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற அனுமதி பெறாமல் தனிப்பட்ட முறையில் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு தொகையை தனி அதிகாரியான பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்க முடிவெடுத்ததை ஏற்க முடியாது. பதிவுத்துறை ஐஜிக்கு இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெரியாது. இது அவருக்கு எதிராக மாறிவிடும். எந்த அடிப்படையில் அவர் முதலீட்டாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க முடிவு செய்தார். மொத்த முதலீட்டு தொகை ரூ.118 கோடி என்ற நிலையில் வெறும் 2000 ரூபாயை முதலீட்டாளர்களுக்கு எப்படி வழங்க முடிவெடுக்க முடியும்.
முடிவெடுத்திருப்பதிலிருந்து அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நீதிமன்றம் இழந்துவிட்டது என கண்டனம் தெரிவித்து விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். வழக்கு 8ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. வருவாய்துறை செயலாளர் பி.அமுதா ஆஜராகி, கலெக்டர்களின் அறிக்கையை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”மாவட்ட கலெக்டர்கள், வருவாய் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்ததன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் 68 சர்வேயர்களை நியமித்து சபாவின் சொத்துகள் குறித்த விவரங்களை சேகரித்து அவற்றை வருவாய்துறை செயலாளர் தாக்கல் செய்துள்ளார்.
அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, சென்னை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பூர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்களின் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கலைமகள் சபாவுக்கு 100க்கும் அதிகமான சொத்துகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. மற்ற 26 மாவட்டங்களில் கலைமகள் சபாவுக்கு உள்ள சொத்துகள் ஆக்கிரமிப்பு குறித்து கலெக்டர்களின் அறிக்கை விரைந்து தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த விசாரணையின்போது தனி அதிகாரிக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சில மூத்த முதலீட்டாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கத்தான் முதலீட்டு பணத்தை தர முன்வந்ததாக தனி அதிகாரி தெரிவித்துள்ளார். எனவே, அந்த உத்தரவை இந்த நீதிமன்றம் நீக்குகிறது. சபாவின் சொத்துகள் குறித்து 26 மாவட்ட கலெக்டர்கள் அடுத்த விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 8 மாவட்டங்களில் உள்ள 100க்கும் அதிகமான சொத்துகள் குறித்து இடைக்கால அறிக்கையை மாவட்ட கலெக்டர்கள் தாக்கல் செய்ய வேண்டும். சபாவின் சொத்துகள் குறித்து தனி அதிகாரிக்கு தேவையான உத்தரவுகளை வருவாய்துறை செயலாளர் பிறப்பிக்கலாம். அந்த உத்தரவுகளை தனி அதிகாரி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்\” என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.