Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலைஞர் வழியில் உழைத்து மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க இந்நாளில் உறுதியேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

சென்னை: கலைஞர் வழியில் உழைத்து மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க இந்நாளில் உறுதியேற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; சொல்லாகவும் - செயலாகவும் நம் நினைவெல்லாம் நிறைந்து, நாள்தோறும் வழி நடத்திக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று.

மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு; அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர். கலைஞர் அவர்களின் தொலைநோக்கு, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது. கலைஞர் அவர்களின் கொள்கை உறுதி, சமூக நீதி - மாநில சுயாட்சி - மொழி உரிமை எனும் தமிழ்நாட்டின் அரசியல் முழக்கத்தை, பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கச் செய்திருக்கிறது.

ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் ; வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்கக் கொள்கைகளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர் அவர்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் புகழ் பரவட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.