கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காமல் ஜனாதிபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்: தமிழக அரசு மீண்டும் சட்ட போராட்டம்?
சென்னை: கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காமல் ஜனாதிபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் இந்த பிரச்னையில் தமிழக அரசு சட்டப்போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி, கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற சட்ட முன்வடிவை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.
அந்த சட்ட முன்வடிவில் ‘தமிழ்நாட்டில் அரியலூர், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருவாரூர் என 8 மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரே திருச்சி பல்கலைக்கழகமாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் விளங்குகிறது. டெல்டா மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவும், உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கும் புதிய பல்கலைக்கழகத்தை தொடங்குவது அத்தியாவசிய தேவையாக உள்ளது. இதனை சரி செய்யும் விதமாக அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் வாழும் மாணவர்களின் மேம்பாட்டிற்காக கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்கப்படவுள்ளது.
கருணாநிதி பெயரிலான பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரும், இணை வேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் இருப்பார்,’ எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி, தஞ்சாவூர் ராஜா சரபோஜி அரசு கல்லூரி, திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி, குடவாசல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என மொத்தமாக 17 கல்லூரிகள் கருணாநிதி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் அந்த சட்ட முன்வடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 3 மாதத்துக்கு மேல் ஆகியும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் உள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் கூறும்போது, ‘தஞ்சாவூர் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றி 40 நாட்கள் ஆகியும் ஆளுநர் ரவி அதற்கு ஒப்புதல் தரவில்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதை தாண்டி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வேறு என்ன வேலை இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது ஆளுநர் மாறுவார் என நினைத்தோம். ஆனால் இன்னும் அவர் மாறவில்லை, என்று குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறும்போது, ‘சாக்கோட்டையில் வேளாண் துறைக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கான முன்மொழிவு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் இன்னும் பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டாலும், அனுமதி கிடைக்கவில்லை. மேலும் காலம் தாழ்த்தினால் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்படும், என்று கூறினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கும்பகோணத்தில், கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற சட்ட மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசு தலைவர்களுக்கு உச்ச நீதிமன்றம் 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு விதித்திருந்தது. கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி 3 மாதங்கள் ஆகிவிட்டதால் இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.