கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ.18.26 கோடியில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் காவல் நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்; ரூ.17 கோடியில் 14 பணிகளுக்கு அடிக்கல்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.18.26 கோடி செலவில் 30,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த காவல் நிலைய கட்டிடம், காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் அறை, கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு அறை, கைதிகள் அறை, உணவருந்தும் அறை, ஆடவர் மற்றும் மகளிர் ஓய்வு அறை, பொதுமக்கள் கலந்தாய்வு கூடம், காத்திருப்பு கூடம், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய காவல் நிலையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு, உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் தலைமையில் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதையடுத்து பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிங்கார சென்னை 2.0 மற்றும் சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், ரூ.9.74 கோடி செலவில் 24,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கொளத்தூரில் ரூ.11.37 கோடி மதிப்பீட்டில் 29,514 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்படவுள்ள புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், பெரவள்ளூர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு, போக்குவரத்து காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவு கட்டிடம், கொளத்தூர், ரெட்டேரியில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் நவீன கழிப்பிட வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் 6வது மண்டலம், 70வது வார்டு,
பில்கிங்டன் சாலையில் அமைந்துள்ள ரயில்வே ஆன்ஸ்லே வாய்க்கால் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மற்றும் மண்டலம்-6ல் ரூ.1 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் 69வது வார்டு, ரங்கசாமி தெரு மற்றும் லோகோ ஸ்கீம் 1வது பிரதான சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் வார்டு-64, 65, 67, 69 ஆகியவற்றில் உள்ள 9 பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள் என மொத்தம் ரூ.17 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மோதக், சென்னை கமிஷனர்அருண், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
* தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு புதிய வாகனம்
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூரில் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் சேதமடைந்த இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக பாதிக்கப்பட்ட 3 பேருக்கு புதிய இருசக்கர வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.