Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை; யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது - சத்குரு

கோவை: சத்குரு புனித கைலாய யாத்திரையை நிறைவு செய்து இன்று (29/08/2025) தமிழகம் திரும்பினார். கோவை விமான நிலையத்தில், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கையில், “மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு, மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை மேற்கொண்டது யோக விஞ்ஞானத்தின் சக்தியை காட்டுகிறது” எனக் கூறினார்.

சத்குருவிற்கு அண்மையில் 2 பெரிய மூளை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு, முதன்முறையாக 17 நாள்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் அவர் கடினமான கைலாய மலை யாத்திரையை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார்.

இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய சத்குரு, “கடந்த ஆண்டு தலையில் அடிப்பட்டதால், இரண்டு முறை மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு 2 வருடம் மோட்டார் சைக்கிள் பயணம் கூடாது என்றார்கள். 5 வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு கைலாய யாத்திரை செல்வதற்கான பாதை திறக்கப்பட்டு உள்ளதால் மோட்டார் சைக்கிளில் கைலாய யாத்திரை போக வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஏனென்றால் யோக விஞ்ஞானத்தின் சக்தியை என்ன என்பதை காட்டவே இந்த யாத்திரையை மேற்கொண்டேன். யோகா என்றால் உடலை வளைப்பது, மூச்சை பிடித்துக்கொள்வது அல்ல, உயிர் மூலத்துடன் தொடர்பு கொள்வது. அந்த சக்தியை கையில் எடுத்துக்கொள்வது.

மருத்துவ ரீதியாக இது முடியவே முடியாது என்று சொல்கிறார்கள், இதை அதிசயம் என்று சொல்லவில்லை, உயிரே அதிசயமானது தான், அந்த உயிருக்கு மூலமானது அதை விட பெரிய அதிசயம். யோகா என்பது அதனுடன் இணைந்து வாழும் தன்மை . ஆகையால் இது யோகாவின் சக்திக்கு ஒரு சாட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி குறித்த கேள்விக்கு, “இது நமக்கு பாதிப்பு தான், ஆனால் நம் நாட்டின் மதிப்பு மற்றும் மரியாதையை நாம் இழந்து விட முடியாது. சாவல்கள் வரும் போது தோல்வி என எண்ணக் கூடாது. நம் நாட்டு மக்கள் உறுதியாக நிற்க வேண்டும். நாம் சக்தி வாய்ந்த நாடு என்பதைக் காட்ட இது ஒரு வாய்ப்பு. இது எதிர்காலத்தில் எப்படி செல்லும் என்று நான் கணிக்க விரும்பவில்லை, யார் எதை செய்தாலும் நம் நாட்டை செழிப்பாக நடத்திக் கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு சாதகமான சூழல் இருந்தால் மட்டுமே செழிக்க முடியும் என்றில்லாமல் எப்படிபட்ட சூழலிலும் செழிப்பாக நம் தொழில்களை நடத்திக்கொள்ளும் திறன்களை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.” எனக் கூறினார்.

ஈஷா கிராமோத்சவம் திருவிழாவிற்கு கிடைக்கும் வரவேற்பு குறித்த கேள்விக்கு, “ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஈஷா கிராமோத்சவத்தை 2026-2027-க்குள் நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்ற நோக்கம் இருக்கின்றது. 2027ஆம் ஆண்டுக்குள் கட்டாயமாக 20 மாநிலங்களுக்கு மேல் இது நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.” எனக் கூறினார்

நம் கலாச்சாரத்தில் கைலாய யாத்திரை என்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. கைலாய மலையை தரிசித்து திரும்பி வருபவர்களை ஊரெங்கும் மக்கள் பெரும் பக்தியுடன் வணங்கி வரவேற்பர். அந்த வகையில் புனித கைலாய யாத்திரையை நிறைவு செய்து தமிழகம் திரும்பிய சத்குருவை, கோவை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பக்தியுடன் வரவேற்றனர். விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பை போலவே மாதம்பட்டி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, செம்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் வழிநெடுங்கிலும் நின்று சத்குருவிற்கு வரவேற்பு அளித்தனர். ஈஷாவின் நுழைவாயிலான மலைவாசல் முதல் ஆசிரம வளாகம் வரை ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் வரிசையாக நின்று சத்குருவை வரவேற்றனர்.

சத்குரு உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர்-இல் இருந்து கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தனது யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து நேபாளத்தின் காத்மாண்டு, பக்தபூர், துளிகேல் ஆகிய பகுதிகள் வழியாக நேபாள-திபெத் எல்லை பகுதியை அடைந்தார். அதன் பின்பு திபெத்தின் ஜாங்மு, நாயலம், சாகா வழியாக மானசரோவர் ஏரியை அடைந்து அங்கிருந்து பாதயாத்திரையாக சென்று கைலாய மலை தரிசனம் செய்தார். சத்குரு யாத்திரை மேற்கொண்ட பாதையானது, மண் சரிவு, தொடர் மழை உள்ளிட்ட ஆபத்துகள் நிறைந்த, கரடுமுரடான பாதை மற்றும் கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 15,000 இருந்து 20,000 அடி வரையுள்ள உயரமானப் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யாத்திரையின் இடையில் சத்குரு நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் உள்ளிட்ட பிரபலங்களுடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாடினர். இந்தியா - சீனா மோதல்கள் தொடர்ந்து வந்ததால் கடந்த 5 வருடங்களாக நேரடியாக கையலாய யாத்திரை செல்ல முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது உருவாகி வரும் இணக்கமான உறவினால் கடந்த ஜூன் மாதம் முதல் திபெத் வழியாக கைலாய யாத்திரைக்கான பாதை மீண்டும் திறக்கப்பட்டது. ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய யாத்ரீகர்கள் மீண்டும் கைலாஷ் மலைக்கு ஆன்மீக பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.