கடையநல்லூரில் ஒரே நாளில் 27 பேரை கடித்த வெறி நாய் சிக்கியது: 8 பேரை கடித்த மற்றொரு நாயை பிடிக்க தீவிரம்
கடையநல்லூர்: கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நேற்று மட்டும் ஒரே நாளில் 27 நபர்களை கடித்த வெறி நாயை இன்று காலை நகராட்சி பணியாளர்கள் பிடித்து தென்காசி கருத்தடை மையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மற்றொரு நாய் இன்று காலை 8 நபர்களை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் அதிகாரிகள் முகாமிட்டு மற்றொரு நாயை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாகவே வெறிநாய் தொந்தரவு அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். அந்தவகையில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருபவர் கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் வானுவர் பிள்ளையார் கோவில் தென் வடல் தெருவை சேர்ந்த பகத்சிங் மகள் உத்ரா.
இவர் நேற்று காலை மெயின் பஜாரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளிக்கு தன்னுடைய பாட்டி செல்லம்மாளுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வெறிநாய் ஒன்று குழந்தையின் கையை கடித்தது. அப்போது பாட்டி தன் கையில் இருந்த புத்தகப் பையை வைத்து நாயை அடித்து விரட்டினார். பின்னர் மாணவி உத்ராவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர பிரிவில் சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தையை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அங்கிருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் குழந்தையை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுமாறும் மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் அதே நாய் கடையநல்லூர் மக்கா நகர் ரஹ்மானியாபுரம் முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவி பர்வீன்பானு, முத்துமாரி, கனகவல்லி, முருகேஷ், ஈஸ்வரி, சந்திரா, தவசிராஜா, கண்ணன், மூக்கம்மாள், பஷீர், சங்கரலிங்கம், செல்லம்மாள், எஹியா, சுமையா பானு, செல்லம்மாள், அப்துல் மஜீத், உதுமான் மைதீன், முஸ்தபா, சிவா, முபாரக், அல்பியா, சேக் மீரான், சிந்தாமதார் , கார்த்திகைலட்சுமி உட்பட 27 நபர்களை கடித்தது.
இதில் நேற்று இரவே 13 நபர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 14 நபர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் கடையநல்லூர் நியூ பஜார் அருகே அந்த நாய் சென்று கொண்டிருந்தபோது நகராட்சி ஊழியர்கள் பத்திரமாக வலை விரித்து நாயை பிடித்து தடுப்பூசி போட்டு தென்காசியில் உள்ள நாய்கள் பராமரிப்பு காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து நெல்லையில் இருந்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, மண்டல பொறியாளர் சனோ குமார், கால்நடை மருத்துவர் சிவரஞ்சனி, நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான ஏராளமான பணியாளர்கள் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு நாய் போக நல்லூர் மாவடிக்கால் பகுதிகளில் இன்று காலை எட்டு பேரை கடித்துள்ளது. அவர்கள் அனைவரும் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.