ரூ.58 கோடியில் சீரமைக்கப்படும் கடப்பாக்கம் ஏரியில் கூடுதல் மழைநீர் சேமித்து அசத்தல்: வெள்ள பாதிப்பு தடுப்பு
திருவொற்றியூர்: மாதவரம் தொகுதி, மணலி மண்டலம் 16வது வார்டில் உள்ள கடப்பாக்கம் ஏரி, சுமார் 164 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கன மழை காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட சிருங்காவூர், பெருங்காவூர், விச்சூர், செம்பியன் மணலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள குளங்கள், வாய்க்கால் மற்றும் குட்டைகள் நிரம்பி, அதிலிருந்து உபரிநீர் வெளியேறி கடப்பாக்கம் ஏரியில் வந்து தேங்கும். இதனால் இந்த ஏரி நீர் சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்படும் வாழை, நெல், விளாம்பழம், கீரை போன்ற விவசாய நிலங்களுக்கு நீராதாரமாகவும், கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், மழைநீர் சேமிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் பெரிதும் பயன்படுகிறது. இவ்வாறு உள்ள இந்த கடப்பாக்கம் ஏரியை பாதுகாக்கும் வகையில் இதன் கொள்ளளவை அதிகப்படுத்தி, சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதன்படி ஆசிய வளர்ச்சி வங்கியின், உலகளாவிய சுற்றுசூழல் வசதி மானிய நிதி ரூ.58 கோடி மதிப்பீட்டில் கடப்பாக்கம் ஏரியை சீரமைக்க திட்டமிடப்பட்டு, இதற்கான பணியை கடந்த சில மாதங்களுக்கு முன், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன்படி கடப்பாக்கம் ஏரியில் படர்ந்து இருந்த ஆகாய தாமரை, அகற்றப்பட்டு, சக்திகளை தூர்வாரி ஆழப்படுத்தி, சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பலமான கரையை உயர்த்தி, அதில் சுற்றிலும் நடைபாதை, சைக்கிள் ஓடுதளம், அலங்கார விளக்குகள், இருக்கைகள் அழகிய மரம், செடிகள் மற்றும் சிறுவர் பூங்கா, பறவைகளுக்காக தீவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கன மழை நீர் தேங்கியதன் காரணமாக கடப்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 1.1 மில்லியன் கன அடியில் இருந்து 1.9 கன அடியாக உயர்த்தப்பட்டதால் ஏரியில் உபரி நீர் வெளியேறாமல் தேங்கியதால் மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரியலூர், கன்னியம்மன் பேட்டை, காமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி கிராம மக்களின் சுமார் 400 ஏக்கர் விவசாயத்திற்கு ஏரி நீர் பெரிதும் பயன்படும். மேலும் வடசென்னையில் மிகவும் பிரம்மாண்டமான சுற்றுலாத்தலமாக இந்த பகுதி மாறும் என்பதால், விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த 3 மாதத்திற்குள் ஏரி சீரமைப்பு பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இந்த கடப்பாக்கம் ஏரி முழுமையான பாட்டிற்கு வருவதன் மூலம் மணலி, சடையன்குப்பம் சுற்றுப்புற தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கைக் குறைக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த பல ஆண்டுகளாக கனமழை பெய்தபோது கடப்பாக்கம் ஏரி நிரம்பி அதிலிருந்து வெளியேறிய உபரி நீரால் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது ஏரி தூர்வாரப் பட்டத்தால் கன மழை பெய்தும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கடப்பாக்கம் ஏரியை சுற்றி உள்ள ஊராட்சி பகுதிகளில் ஏராளமான ஏரி, குளம், குட்டைகள் உள்ளன. இவைகள் பெரும்பாலும் சேரும், சகதியமாக தூர்ந்திருப்பதால் இங்கு மழை நீர் தேங்க முடியாமல் வடிந்து, உபரி நீராக கடப்பாக்கம் ஏரியில் வந்து விடுகிறது. இதனால் ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்தினாலும், ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் மழைநீர் புகுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே கடப்பாக்கம் ஏரியை தூர்வாரி சீரமைத்தது போல் திருவள்ளூர் மாவட்டதில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதியில் உள்ள ஏரி,குளங்கள், குட்டைகளை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரியலூர் அருகே மதகுகளையும் உயர்த்த வேண்டும்,’ என்றனர்.
பறவைகள் சரணாலயம்
எண்ணூர் அலையாத்தி காடுகளில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வகையான அரிய பறவைகள் வந்து சென்றன. ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன், கன மழையின் போது ஒன்றிய அரசு நிறுவன ஆயில் கழிவுகளால் அலையாத்தி காடுகளும், பறவைகளும் பாதிக்கப்பட்டன. இதனால் தற்போது வெளிநாட்டு பறவைகள் எண்ணூர் அலையாத்தி காடுகளுக்கு வருவது வெகுவாக குறைந்து விட்டது. தற்போது கடப்பாக்கம் ஏரிக்கு நடுவே மரங்களை நட்டு தீவு அமைத்து அதில் பறவைகள் சரணாலயம் அமைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் வரும் காலங்களில் வெளிநாட்டு பறவைகள் இங்கு வருகை தரும் என தெரிகிறது.
சுற்றுலா தலமாக மாறும்
அதிகாரிகள் கூறுகையில், ‘கடப்பாக்கம் ஏரிக்கரையில் பேட்மிண்டன் ,உடற்பயிற்சி மைதானம், உணவகம், மற்றும் வாகன நிறுத்துமிடம் நடைபாதைகள், நிழல் தரும் இருக்கைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் கற்றல் பகுதிகள், மற்றும் பிரத்யேக பட்டாம்பூச்சி மற்றும் தட்டான்பூச்சி தோட்டங்கள் சக்கர நாற்காலிகளுக்கு ஏற்ற சரிவுப் பாதைகள், தொட்டுணரக்கூடிய நடைபாதைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா போன்ற பல்வேறு அம்சங்களுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 10 ஆயிரம் மரங்கள் வளர்க்க திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன,’ என்றனர்.


