சாயல்குடி : கடலாடியில் தேவர் குருபூஜை மற்றும் முளைப்பாரி திருவிழாவையொட்டி 10 நாள் திருவிழா நடந்தது. கடலாடி தேவர் மகாசபையின் சார்பில் ராஜராஜேஸ்வரி அம்மன் 8 ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118ம் ஆண்டு ஜெயந்தி, 63வது குருபூஜை மற்றும் 37ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடந்தது.
நிகழ்ச்சிகளுக்கு தேவர் மகாசபை தலைவர் ஜெகநாதன் தலைமையும், செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், பொருளாளர் செல்லப்பாண்டியன் முன்னிலையும் வகித்தனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. புதன்கிழமை கணபதிஹோமம் மற்றும் யாகச்சாலைகள் வளர்க்கப்பட்டு ராஜேஸ்வரி அம்மன், விநாயகர், முருகன், தேவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி,சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.
திருவிழாவையொட்டி தினந்தோறும் இரவில் பெண்கள் கும்பி அடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம், சிறுமிகள் கோலாட்டம் ஆடியும் உற்சாகமாக கொண்டாடினர்.
மாவிளக்கு, பால்குடம், அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை, வேல் எடுத்தும், முடிகாணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தினர். மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.
கடைசி நாளான நேற்று கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாலையில் பெண்கள் முளைப் பாரியை எடுத்து கடலாடியின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து குளத்தில் கரைத்தனர்.
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கடலாடி தேவர்மகாசபை மற்றும் இளைஞரணியினர் செய்திருந்தனர்.
