சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: ஐகோர்ட் கிளை தீர்ப்பு
மதுரை: கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்கள் குழந்தை தத்தெடுப்பை அங்கீகரிக்காதபோதிலும் இம்மதங்களை சேர்ந்தவர்கள் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணமாகி குழந்தையில்லை. அவரது சகோதரருக்கு 3 குழந்தைகள். அவரது சகோதரர் சமீபத்தில் இறந்த நிலையில் சகோதரரின் 8 வயது மகனை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். மகனை தத்து கொடுக்க சகோதரரின் மனைவியும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து தத்தெடுப்பு பத்திரம் பதிவுக்காக மேலூர் கிழக்கு சார்பு பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தை இஸ்லாம் மதம் தத்தெடுப்பை அனுமதிக்கவில்லை எனக் கூறி சார்பதிவாளர் நிராகரித்தார். அதை ரத்து செய்து தனது தத்தெடுப்பை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
இஸ்லாம் மதம் குழந்தை தத்தெடுப்பை அங்கீகரிக்கவில்லை என்பது உண்மை தான். அதே நேரத்தில் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் - 2000, அந்த சட்டத்தின் 2015ம் ஆண்டின் பிரிவின்படி, மத பின்னணியின் அடிப்படையில் விருப்பமுள்ள பெற்றோர் குழந்தைகளை தத்தெடுக்க வழி வகை செய்கிறது. சிறார் நீதிச் சட்டம் குழந்தைகளை தத்தெடுக்க உதவுகிறது. கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் தத்தெடுப்பை அங்கீகரிக்காவிட்டாலும், அந்த மதத்தினர் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம்.
இந்துக்களின் தத்தெடுப்பு முற்றிலும் வேறுபட்டது. இந்து மதத்தில் தத்தெடுப்பு வெளிப்படையாக அனுமதிக்கிறது. இந்த தத்தெடுப்பு இந்து தத்தெடுப்புகள் மற்றும் பராமரிப்பு சட்டம்- 1956 சட்ட விதிகளுக்கு உட்பட்டது.
இந்த வழக்கில் குழந்தையை தத்து கொடுப்பவரும், தத்து எடுப்பவரும் இஸ்லாமியர். இவர்கள் குழந்தை தத்தெடுப்புக்கு சிறார் நீதி சட்டம் 2015-ல் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்காக தத்தெடுப்பு பத்திரத்தை பதிவு செய்ய எளிமையான வழிகளை நாட முடியாது. இதை சட்டம் அங்கீகரிக்கவும் இல்லை. குழந்தை தத்தெடுப்பு என்பது அந்த குழந்தையின் உண்மையான பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெற வேண்டும். இதனால் குழந்தை தத்தெடுப்பவர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரை அணுக வேண்டும்.
5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் தத்தெடுக்கப்படும் போது சம்பந்தப்பட்ட குழந்தையின் ஒப்புதலை பெற வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் தத்தெடுப்பு உத்தரவு பிறப்பிக்கும் முன்பு குழந்தையின் வயது மற்றும் புரிதலைக் கருத்தில் கொண்டு குழந்தையின் விருப்பங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து திருப்தியடைய வேண்டும் எனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தத்தெடுப்பு முறையில் குழந்தையின் நலனை மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும்.
தற்போது வரை தத்தெடுக்கும் உரிமை அரசியலமைப்பின் பிரிவு 21ன் எல்லைக்குள் ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும் தத்தெடுக்கும் உரிமை நிச்சயமாக ஒரு மனித உரிமையாகும். சர்வதேச மாநாடுகள் ஒரு குடும்பத்தை உருவாக்கும் உரிமையை மனித உரிமையாக அங்கீகரித்துள்ளன. இதில் சட்டப்பூர்வ விதிகளின் அடிப்படையில் தத்தெடுக்கும் உரிமையும் அடங்கும். இதனால் மனுதாரர்கள் தத்தெடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மனுதாரரின் தத்தெடுப்பு விண்ணப்பம் அதற்கான போர்ட்டலில் பதிவேற்றப்பட்ட மூன்று வாரங்களுக்குள் குழந்தை பாதுகாப்பு அலுவலர் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க வேண்டும்.
இந்த விவகாரம் கலெக்டர் முன்பு சென்றதும் 3 வாரத்தில் தீர்வுகாணப்பட வேண்டும். கலெக்டர் தத்தெடுக்க அனுமதி வழங்கிய பிறகு அதைப் பதிவு செய்யத் தேவையில்லை. சமீபகாலங்களில் தத்தெடுப்புக்கு அனுமதி வழங்குவதில் நீண்ட தாமதம் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. குழந்தை பிறக்கும்போதோ அல்லது குழந்தை பருவத்தின் பிற்பகுதியிலோ தத்து கொடுப்பது என்பது ஒரு நிரந்தரமான மற்றும் வளர்ந்த குடும்பத்தை உருவாக்கும். இதில் சம்பந்தப்பட்ட குழந்தையின் உடல், உணர்ச்சி, உறவு மற்றும் கல்வித் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
பல சந்தர்ப்பங்களில் தத்தெடுப்பானது சம்பந்தப்பட்ட குழந்தை தத்தெடுப்புக்கு முன்பு சந்தித்த பாதகமான மற்றும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளிலிருந்து மீள வாய்ப்பு அளிக்கிறது. தத்தெடுப்பு ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கை முறை மற்றும் தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வாய்ப்புகளை வழங்குகிறது. எனவே தத்தெடுப்பு நடைமுறைகளை தாமதப்படுத்தும்போது குழந்தைகளின் வாழ்க்கை பாதையில் கணிசமான மாற்றத்துக்கான அனுபவங்கள், வாய்ப்புகளை தாமதப்படுத்துகிறது. எனவே தத்தெடுப்பு நடைமுறைகளை சிறார் நீதிச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.