14வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில் இன்று கிளைமாக்ஸ்; 8வது முறையாக பட்டம் வெல்ல ஜெர்மனி ஆயத்தம்: சவால் அளிக்குமா ஸ்பெயின்?
சென்னை: 14வது ஜுனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடந்து வந்தது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று, கால்இறுதி, அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இன்று கிளைமாக்ஸ் அரங்கேறுகிறது. இரவு 8 மணிக்கு சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிபோட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே 7 முறை சாம்பியன்பட்டத்தை வென்றுள்ள நம்பர் 1 அணியான ஜெர்மனி இன்று 8 வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது.
லீக் சுற்றில் 3போட்டியில் வெற்றி, கால்இறுதியில் பெனால்டிஷூட்அவுட்டில் பிரான்சுக்கு எதிராக 3-1, அரையிறுதியில் இந்தியாவை 5-1 என அனைத்து போட்டிகளிலும் வென்று அசுர பலத்தில் உள்ளது. மறுபுறம் ஸ்பெயின் முதன்முறையாக பட்டம் வெல்லும்ஆர்வத்தில் களம் இறங்குகிறது. லீக் சுற்றில் 3, கால் இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 4-3, அரையிறுதியில் அர்ஜென்டினாவுக்குஎதிராக 2-1 என 5போட்டிகளிலும் வென்றுள்ளது. இருஅணிகளும் இதற்கு முன் 10முறை மோதியதில் ஜெர்மனி 6, ஸ்பெயின் 1ல் வென்றுள்ளன.
3 போட்டி டிராவில் முடிந்துள்ளது.முன்னதாக மாலை 5.30 மணிக்கு வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் 3போட்டியிலும் வென்ற இந்தியா, கால்இறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்திய நிலையில், அரையிறுதியில் ஜெர்மனியுடன் தோல்வியடைந்தது. இன்று வெற்றியுடன் சொந்த மண்ணில் வெண்கலபதக்கம் பெற போராடும். இன்று பட்டம் வெல்லும் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் , துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசு கோப்பையை வழங்குகின்றனர்.


