சென்னை: 14வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. லீக் சுற்று முடிவடைந்துள்ள நிலையில் ‘ஏ’ பிரிவில் இருந்து ஜெர்மனி அணியும், ‘பி’ பிரிவில் இருந்து இந்தியாவும், ‘சி’ பிரிவில் இருந்து அர்ஜெண்டினாவும், ‘டி’ பிரிவில் ஸ்பெயின் அணியும், ‘இ’ பிரிவில் நெதர்லாந்து அணியும் மற்றும் ‘எப்’ பிரிவில் பிரான்ஸ் ஆகிய அணிகள் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்த 6 அணிகளை தொடர்ந்து, 2வது இடம் பிடித்த பெல்ஜியம் மற்றும் நியூசிலாந்து அணி கால் இறுத சுற்றில் கால்பதித்துள்ளன. கால் இறுதி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் இன்று நடக்கிறது. பிற்பகல் 12.30 மணிக்கு நடக்கும் காலிறுதி போட்டியில் ஸ்பெயின் - நியூசிலாந்து அணிகளும், மதியம் 3 மணிக்கு நடக்கும் போட்டியில் ஜெர்மனி - பிரான்ஸ் அணிகளும், மாலை 5.30 மணிக்கு தொடங்கும் போட்
டியில் அர்ஜென்டினா -
நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன. இதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடக்கும் காலிறுதியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி, பலம் வாய்ந்த பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. பெல்ஜியம் அணியை பொறுத்த வரை லீக் போட்டிகளில் அந்த அணி நமிபீயாவை(12-1), எகிப்தை(10-0) என்ற கணக்கில் துவம்சம் செய்தது. ஸ்பெயினிடம் மட்டும் (2-0) என்ற கணக்கில் தோற்று டி பிரிவில் 2வது இடம் பிடித்தது. இதனால் இன்று இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நேற்று நடைபெற்ற வங்கதேசம் மற்றும் ஓமன் இடையிலான போட்டியில் 13-0 என்ற கணக்கில் ஓமனை பந்தாடியது வங்கதேசம்.

