சென்னை: உலகக்கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டிகள் சென்னை, மதுரையில் நேற்று கோலாகலமாக துவங்கின. சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் அர்ஜென்டினா-ஜப்பான் அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா, 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
2வது போட்டியில் நியூசிலாந்து அணி, சீனாவை 5-3 என்ற கோல் கணக்கிலும், 3வது போட்டியில் சுவிட்சர்லாந்து அணி, ஓமனை, 4-0 என்ற கோல் கணக்கிலும் வென்றன. அதேபோல், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள சர்வதேச ஹாக்கி செயற்கையிழை மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் கனடா, அயர்லாந்து அணிகள் மோதின.
இப்போட்டியின் இறுதியில் அயர்லாந்து 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஸ்பெயின் - எகிப்து அணிகள் மோதிய 3வது ஆட்டத்தில், ஸ்பெயின் 8-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை சூறையாடி வென்றது. கடைசி ஆட்டத்தில் பெல்ஜியம் - நமீபியா அணிகள் விளையாடின. இந்த போட்டியில் கோல் மழை பொழிந்த பெல்ஜியம் 12-1 என்ற கோல் கணக்கில் நமீபியாவை வீழ்த்தியது.

